“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம்  இடம்பெற்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் ஸ்ரீ அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ், மகளிர் அணி செயலாளர் வாசுகி சுதாகர், யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது டெல்லியின் காவடிகள் எனும் தொனிப்பொருளில் ஒரு நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

13ஆம் திருத்தச் சட்டத்தில் ஒற்றையாட்சி முறைமை காணப்படுவதாகவும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் 77 வருடங்களாக நிராகரித்து வந்த ஆட்சி முறையினை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் கையொப்பமிட்டு 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

எனவே இதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளியிட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், சம்பந்தன் அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது தும்புத்தடியால் கூட தொட முடியாது என்று கூறிய 13ஆம் திருத்தச் சட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.

13 ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கின்றது என சிலர் கூறுகின்றனர். தொடக்கப்புள்ளி என்பது மிகவும் சரியான புள்ளியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அனைவரும் ஒற்றையாட்சிக்குள் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *