வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது.அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது.நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுவருகின்றோம்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி.எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார்.ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,பலவற்றை செய்துவருகின்றோம்.

நான் கல்வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து பணி நடைபெற்றுவருகின்றது.இந்த கொரனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது.இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதிவரவுள்ளது.பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குசென்றுவிடும்.அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டுசெல்வதற்கான கல்விதுறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்.அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல்செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.”  என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *