
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினரால் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினரால் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு,மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் சிவசண்முகமூர்த்தி சிவகௌரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் பிரதம விருந்தினராகவும் மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாமினி சுசீலன், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கட்டிட நிர்மானத்துறை, தன்னியக்க பொறியியல் துறை, கட்டுமானத்துறை, மின்னியல் துறை, இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை, பொருத்துதல் மற்றும் பினைத்தல், உலோகமாக்கல் மற்றும் இயந்திரவினைத்துறை, புடவைக் கைத்தொழில், பாதனி மற்றும் தோற்பொருள் உற்பத்தி, மரவேலை, எழுதுவினைஞர் துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் பயிற்சி பெற்ற 85 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பயிலுநர் , கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஐம்பதாம் ஆண்டு பூர்த்தியின் ஓர் அங்கமான இந் நிகழ்வில், தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





