
கொழும்பு, ஜனவரி 27: பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவு பணம் திருடப்பட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்று பிரதமரின் ஊடகச் செயலர் ரொஹான் வெலிவிட்ட நியூஸ் வயர் ஆங்கில இணையத் தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலராகப் பணியாற்றிய ஒருவர், பிரதமரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் சம்பளப்பணம் இந்தக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும், அப்பணமே மோசடி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக ரொஹான் வெலிவிட்ட நியூஸ் வயர் ஆங்கில இணையத் தளத்துக்கு கூறுகையில்
“இவ்வாறானதொரு சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் உள்ளூர் நாளிதழ்களில் வெளியான செய்திகளைப் பார்த்தே தாம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.