நீண்ட காலமாக நோர்வூட் – சென்ஜோன்டிலரி பகுதியில் பொருட்கள், அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு சென்ற லொறிகளிலிருந்து, திருடி வந்த மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து மரக்கறி மூட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
கடந்த ஒரு வருட காலமாக, நோர்வூட்-பொகவந்தலாவை பிரதான வீதிகளில் அபிவிருத்த பணிகள் இடம்பெற்று வருகின்ற வேளையில், பலங்கொடை மற்றும் எம்பிலிபிட்டிய பகுதியிலிருந்து பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா , ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு லொறிகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த வீதியில் அதிகாலை மெதுவாக பயணிக்கும் லொறிகளில், குறித்த திருட்டுக் கும்பலில் ஒருவர் ஏறி, கயிறு மூலம் பொதிகளை கட்டி இறக்குவதாகவும், அதனைத் தொடர்ந்து பின்னால் வரும் ஓட்டோவில் ஏற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த சந்தேகநபர்கள் அதிகம் வருமானத்தைப் பெற்றுள்ளதாகத் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது குறித்த சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


