வவுனியாவில் தபால் சேவைகள் முடங்கும் அபாயம்

வவுனியா தலைமை தபால் நிலையத்தில் தபால்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் கொழும்பில் இருந்து வடமாகணத்திற்கு அனுப்பப்படும் தபால்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் பெற்று கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த தபால்கள் அனுராதபுரத்திற்கு அதிகாலை 2 மணிக்கு கொண்டு வரப்படுகின்றது.

அவற்றை யாழ் தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தில் எடுத்து வரப்பட்டு வவுனியாவிற்கு வழங்கப்படுகின்றது.

இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன், காலை6 மணியளவிலேயே வவுனியா தபால் அலுவலகத்திற்கு கடிதங்கள் கிடைப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இவ்வாறு காலதாமதம் ஏற்படுவதால் தபால் ஊழியர்களிற்கு வேலைப்பளு அதிகமாக காணப்படுவதுடன், பொதுமக்களிற்கு கிடைக்க வேண்டிய தபால்களும் உரியநேரத்தில் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பொதிகளும் வாகனத்தில் இடவசதி காணாமையினால் அனுராதபுரத்திலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வவுனியா தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தின் மூலமே அனுராதபுரத்திற்கு வருகின்ற தபால்கள் பெற்று கொள்ளப்பட்டிருந்தது.

இதனால் அதிகாலை 4 மணியளவில் வவுனியா மாவட்டத்திற்கான தபால்கள் கிடைத்துவிடும்.

ஆகையால் அன்றைய தினமே அதனை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான செயற்பாட்டை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது.

எனவே முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது போல வவுனியா தபால் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தினை அனுப்பி அனுராதபுரத்தில் உள்ள தபால்களை பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வவுனியா தபால் தினைக்கள ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *