வவுனியாவில் ஹோட்டல் உரிமையாளர் கைது! நடந்தது என்ன?

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்து, சுகாதார பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வவுனியா – சின்னப்புதுக்குளம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளருக்கு (வயது 59) கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

அவரது உடல் நிலை தொடர்பில் ஆய்வு செய்த சுகாதாரப் பிரிவினர் அவர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

இருப்பினும் அவர் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்ததுடன், அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை அறிவதற்காக ஹோட்டல் சிசிரீவி பதிவுகளை சுகாதாரப் பிரிவினர் கோரிய போது அதனையும் காட்ட மறுத்திருந்தார்.

அத்துடன், சுகாதாரப் பிரிவினருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக சுகாதாரப் பிரிவினர் வவுனியா பொலிசில் ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்து, பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம் குறித்த நபரை கைது செய்து கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுடன், சிசிரீவி பதிவுகளையும் சுகாதாரப் பிரிவினருக்கு காட்டுமாறு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலுக்கு சென்ற வவுனியா பொலிசார் ஹோட்டல் உரிமையாளரை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்து, சுகாதாரப் பிரிவினர் ஊடாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேவேளை, நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கைது செய்ய பொலிசார் சென்ற போது அவர் உடன் வர மறுப்பு தெரிவித்து, தனது சட்டத்தரணி வர வேண்டும் என தெரிவித்ததுடன், சட்டத்தரணி ஒருவர் வந்த பின்னரும் நீண்ட இழுபறியின் பின்னரே நோயாளர் காவு வண்டியில் ஏறியிருந்தார். இதன்காரணமாக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் குறித்த ஹோட்டல் முன்பாக நீதிமன்ற கட்டளையுடன் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply