‘டெல்டா’ தொற்று- மன்னார் மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

‘டெல்டா’ தொற்று தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் இடம்பெற்று வரும் கொரோனா மரண வீதத்துடன் ஒப்பிடும்போது  மன்னாரில் குறைவாக காணப்பட்டாலும் எமது மரண வீதம் அதிகரித்து செல்வதையே காட்டுகிறது.

ஆகவே மக்கள், சுகாதார  நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து செயற்பட வேண்டும்.

மேலும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மக்கள் அச்சம் கொள்ளாமல், அருகில் உள்ள வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்து,  தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னார் மாவட்ட மக்கள் தற்போது சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டாலும் கூட கூடுதலான அவதானத்தை இன்னும் செலுத்த வேண்டும்.

அப்போதுதான்,  நாடு முழுவதும் பரவுகின்ற ‘டெல்டா தொற்று’ மன்னார் மாவட்டத்தில் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply