‘நீதிக்கான அணுகல்’ செயற்திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்!

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து மழையில் நனைந்தபடி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

நீதி அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களும் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ‘நீதிக்கான அணுகல்’ என்ற நடமாடும் சேவை முகாம் ஒன்றை இன்று நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகமும் இணைந்து, நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக சேவை வழங்கும் செயற்றிட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்தி வரும் நிலையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் நீதி அமைச்சின் இந்த நடமாடும் சேவை என்பன நடைபெற்றது.

காணாமல் போனோருக்கான அலுவலகம் கண்துடைப்பு நாடகம் ழுஆP அலுவலகத்தை நிராகரிக்கிறோம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்த நீதி அமைச்சின் அலுவலக அதிகாரி ஒருவர் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் நடமாடும் சேவை முகாமுக்கு வருகைதருமாறும், அமைச்சரோடு கலந்துரையாடுமாறும் அழைப்பு விடுத்தார்.

இதனை நிராகரித்த போராட்டகாரர்கள் எதிர்வரும் ஜெனீவா அமர்வை சமாளிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த கண்துடைப்பு நடவடிக்கையில் எமக்கு நம்பிக்கை இல்லை.

எமக்கு நட்டஈடோ மரண சான்றிதழோ தீர்வாகாது. குறைந்தப்பட்சம் இராணுவத்திடம் கையளித்தோருக்காவது என்ன நடந்தது என்ற பதிலை இந்த அரசாங்கம் சொல்லவேண்டும்.

அதனைக்கூட இந்த அரசாங்கம் செய்யாது. இந்த அரசின்மீதோ நீதித்துறை மீதோ எமக்கு நம்பிக்கை இல்லை என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி நீதி அமைச்சின் அதிகாரியிடம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் வெறும் நான்கு பேர் மாத்திரம் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்ததோடு, அதில் கலந்துகொண்ட மூன்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள், தமக்கு இழப்பீடோ, நட்ட ஈடோ வேண்டாம் எனவும், உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதி விசாரணையே வேண்டும், தமது உறவுகளே வேண்டும் என நீதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

நண்பகல் வரை ழுஆP அலுவலக அமர்வுகள் இடம்பெற்று நிறைவடைந்த நிலையில், அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அணியினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இடம்பெற்ற இடமான பிரதான வாயில் வழியாக வெளியேறாது மாற்று பாதையூடாக விரைவாக வெளியேறி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *