
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இ கொழும்பு − கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஆண்டு உள்ளிட்ட தகவல்களும், இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு, தசாப்தங்கள் கடந்தும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
2000ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியில், 12 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் 10 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 ஊடக நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொலை, கடத்தல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

