நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – ஜனா

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபில் நடத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கொக்கட்டிச்சோலை படுகொலை   என்று கூறப்படுவது 1987ஆம் ஆண்டு அகதிகளாக இந்த இறால்வளர்ப்புத் திட்டத்துக்குள் இருந்த அகதிகளாக இருந்த பொதுமக்களையும், இந்தப்பிரதேச மக்களுமாக 150க்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்தப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார்கள் அவர்களது நினைவா இந்த நினைவுத்தூபி அமைக்கக்கட்டு வருடா வருடம் நினைவேந்தல் நடைபெற்றுவருவரு வழமை.

கடந்த வருடம் கூட இந்த இடத்தில் கொட்டில் அமைத்து மிகவும்விமர்சையாக இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இந்த வருடம் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டு பொதுமக்கள் தங்களது உறவுகளை நினைத்து நினைவேந்தக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தாலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நான் உட்பட உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார், பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கின்றார். இந்த நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசு கடந்த காலங்களில் போராட்டத்தில் மரணித்த போராளிகள், பொதுமக்களை எதிர்காலச் சந்தத்தியினர் நினைவுகூரக்கூட விடுவதில்லை. அவர்களை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார்கள். இந்தப்படுகொலை கூட இந்த ராஜபக்ச சகோதரர்களின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையொட்டிய அரசினால் நடத்தப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க ஆட்சிக்காலத்தில் இது நடைபெற்றிருந்தது.

இருந்தும் இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம். என அவர் இதன்போது” தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *