
நுவரெலியா மாவட்டத்தில் நிறுவுவதாக தெரிவித்த பிரதேச செயலகங்களை உடனடியாக நிறுவ வேண்டும் என கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதி பெ.முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை நாம் செய்து வருகின்றோம். மலையக சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்த பலர் எம்முடன் இணைந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் வாழ்கின்றனர். அனைத்து மத, இன மக்களும் இங்கே வாழ்கின்றனர்.
இவர்களுக்கு 5 பிரதேச செயலகங்கள் தான் இருக்கிறது. அதே போன்று மாத்தளையில் 5 லட்சம் மக்களுக்கு 11 பிரதேச செயலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் மலையகத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டாலே சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக இரண்டு தசாபத்தங்களாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்களும், காலி மாவட்டத்தில் மூன்று பிரதேசகங்களும் நிறுவப்படும் என வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது.
தற்போதைய ஆட்சிக் காலத்தில் காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்களும் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் 5 பிரதேச செயலகம் நிறுவப்பட வேண்டிய நுவரெலியா மாவட்டத்தில் ஒரே ஒரு உப செயலகம் மட்டுமே இதுவரை நிறுவப்பட்டுள்ளது.
ஆகவே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட பிரதேச செயலகங்களை அரசு நிறுவ வேண்டும் என தெரிவித்து, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளோம்.- என்றார்.