
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை மனுவினை இரண்டாவது தடவையாகவும் புத்தளம் மேல்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக, சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே பிரதிவாதி சார்பில் இரண்டாவது முறையாக கோரப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரதிவாதியை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி பிரதிவாதி சார்பில் பிணை விண்ணப்பம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு சாட்சி விசாரணைகளுக்காக மீண்டும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், சாட்சியாளர் விசாரணை மிக நீண்ட நேரம் இடம்பெற்றதுடன், வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றது.
அத்துடன், பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் இன்றைய தினமும் இரண்டாவது தடவையாக அவரது சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.
பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், குறித்த பிணை கோரிக்கையை மீண்டும் நிராகரிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பை அறிவித்து, வழக்கை பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த வாரம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசதரப்பு சட்டதரணிகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இரண்டாவது முறையாகவும் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.