இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை கொண்ட தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் 1000 ரூபா சம்பளம் வாங்குகின்ற தோட்டத் தொழிலாளர்கள் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படுகின்ற சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்து உரையாற்றும் போதே எம்.ராமேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தோட்டத்தொழிலாளர்கள் இந்த 1000 ரூபாவை வைத்துக்கொண்டே வீட்டு வாழ்கை பிள்ளைகளின் கல்வி உணவு என அனைத்தையும் கஸ்டப்பட்டு சமாளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த 1000 ரூபாவைக்கூட நீதிமன்றங்களுக்கு சென்றே பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாக எம்.ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக எம்.ராமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பளத்திற்காக இன்று தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தவில்லை என்றும் இது அரசியலுக்காவே நடத்தப்படுவதாக எம்.ராமேஸ்வரன் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை என்றும் இதனை புரிந்து கொண்டும் சிலர் தேர்தலை நடத்த வேண்டுமென கோருவதாக எம்.ராமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.