
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவும் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
சபாநாயகருடன் தொடர்புடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் அண்மைய நாட்களில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும், அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட கொரோனா தொற்றாளர் ஒருவரால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட குழுவினரையும் சபாநாயகர் சந்தித்துள்ளார்.
சபாநாயகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தையும் கிருமிநாசினி நீக்கம் செய்ய நாடாளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சபாநாயகர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், சபாநாயகர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 26ஆம் திகதி சபாநாயகருக்கு பல அறிகுறிகள் காணப்பட்டதால் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பரிசோதனை முடிவில் கடந்த 27ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.