உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொதுஜன பெரமுனவின் பெரும் புள்ளிகளும் திட்டம் தீட்டுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் எதிரணியில் சிலர் தன்னை சந்தித்து தேர்தலினை தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள் என பெயர் குறிப்பிடாது தெரிவித்தமையானது நகைச்சுவை நடிகர் பேசுவதனை போலுள்ளது.
ஆனால் ஆளும்கட்சியினை பொறுத்தமட்டில் பகிரங்கமாக சில அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் சேர்ந்து
தேர்தலினை ஒத்திவைக்க வேண்டும் என்பதை கூறி வருகின்றனர்.
பிரதான கட்சியொன்றின் தலைவரான மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் பொது செயலாளரான சாகரகாரியவசம் ஆகியோர் மக்களை முட்டாளாக்க குழந்தைகள் போல நடிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் வெளியில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுகின்றனர். அதனை ஏன் ஊடகங்களிடம் சொல்லுகின்றார்கள், ஜனாதிபதியிடம் கூறுங்கள்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் பாராளுமன்ற வருகைக்கு பின் ஆளும்கட்சியின் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து பேசிய மஹிந்த ராஜபக்ச உட்பட சாகரகாரியவசம் ஆகியோர் பெட்டி பாம்பாக, பூனையாக அடங்கி வாயினை மூடி இருந்துள்ளனர்.
ஆகவே இவர்கள் தம்மை மக்களிற்கு முன் ஜனநாயக போராளிகளாக காட்டிக் கொண்டு திரைக்கு பின் ஜனநாயகத்தினை எட்டி உதைக்கின்றனர்.
இந்த தந்திரத்தினை பொதுஜன பெரமுன வெளிப்படுத்த வேண்டும்.
அத்தோடு ஜனாதிபதிக்கு பின்னால், பொதுஜன பெரமுனவின் தலைவர் தொடக்கம் பொதுச்செயலர் வரை அனைவரும் உள்ளனர். எனவும் தெரிவித்துள்ளார்.