கச்சதீவு திருவிழாவில் ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு! SamugamMedia

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம், ஊடகவியலாளர்கள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்து கடற்படையினரின் விசேட கப்பலில் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றிருந்தது. கச்சதீவில் ஊடகங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் கடற்படையின் ஊடகப் பிரிவினரே இருந்தனர். ஊடகவியலாளர்களுக்கு வேறு ஒழுங்குகளும் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்படவில்லை.  

கச்சதீவுத் திருவிழா முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களை மீள அழைத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் எவையும் யாழ். மாவட்டச் செயலகத்தாலோ கடற்படையினராலோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இதேநேரம் தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்களை கடற்படையினர் தமது விசேட படகில் ஏற்றிச் சென்றனர். தமது உறவினர்களையும் அவ்வாறு அழைத்துச் சென்றனர்.

வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, “என்னிடம் எதுவும் தெரிவிக்க வேண்டாம். நீங்கள் எப்படியாவது செல்லுங்கள்” – என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.

3 மணி நேரம் வரையில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் இறுதியாக வடதாரகை படகின் மூலம் குறிகாட்டுவான் திரும்பினர்.

இதேவேளை, திரும்பிச் செல்வதற்கான படகு ஒழுங்குகள் தொடர்பில் தகவல் தெரியாத மக்கள் அந்தரித்தனர். அவர்கள் அங்கிருந்து நெடுந்தீவு சென்று பின்னர் குறிகாட்டுவானுக்குச் சென்றனர்.

Leave a Reply