’கற்க கசடற’ குறளை மேற்கோள்காட்டி குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது உரையாற்றிய அவர், ‘’இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை நினைவுகூர்கிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது.

கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த காலங்களைவிட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறது. உலகிற்கு ஏராளமான மருந்து பொருட்களை இந்தியா கொடுத்து உதவியிருக்கிறது.

மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு உதவியாக இருந்தது.

நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. கிராமங்களுக்கு குழாய்மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

சமுதாயத்தில் சமநிலை இருக்கவேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணத்தை செயல்படுத்துவதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியும் அவர் உரையாற்றியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *