
கொழும்பு, ஜனவரி 31: நாடு எதிர்கொள்ளும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் பெறுவதற்காக தனியார் துறைகளிடம் பேசி வருகிறோம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: நாடு எதிர்கொள்ளும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், உடனடியாக மின்சாரத்தைப் பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் பெறுவது தொடர்பாக தனியார் துறைகளிடம் பேசி வருகிறோம். இதுவரை 100 மெகாவாட் மின் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
இது தொடர்பாக, இந்த வாரம் மற்றொரு குழுவுடன் விவாதிக்கவுள்ளோம். அடுத்த மாத இறுதிக்குள் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 300 மெகாவாட் மின்சாரம் பெறுவது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும்.
மேலும், புனரமைப்புப் பணிகளில் இருந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆம் அலகின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது. எனவே, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை சுத்திகரிக்கும் பணி அங்கு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.