12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை – வைத்தியர்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது இன்னும் பரிசீலனையில் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின்  பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக தரம் ஆறாம் மாணவி உயிரிழந்ததை அடுத்து,  எந்தவொரு வயதினருக்கும் தடுப்பூசி போடுவது முறையான அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பல நாடுகள் ஏற்கனவே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன என்றும் எவ்வாறாயினும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து முடிவெடுக்க தங்களுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனெனில் தாங்கள் இன்னும் அறிவியல் தரவுகளைப் பெறவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு, பெற்றோர்கள் இது குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையோ அல்லது வேறு எந்த வயதினரையோ கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்போது பெற்றோர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானதென்றும் அவர் வலியுறுத்தினார்.

மாரவிலையைச் சேர்ந்த தரம் ஆறாம் மாணவி கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவத்தைப் பொறுத்த வரையில், அந்தப் பள்ளி மாணவி உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார் என்றும் எவ்வாறாயினும் தாங்கள் இன்னும் குறித்த மாணவியைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் பிரேத பரிசோதனையில் அவர் கடுமையான நிமோனியாவால் இறந்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *