கச்சதீவு திருவிழாவில் தங்க நகை திருட்டு – சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு SamugamMedia

தமிழக பக்தர் ஒருவருடைய உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாளினி ஜெயபாலசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவருடைய 8 பவுண் தங்க சங்கிலி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.

தான் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தனக்கு பின்னால் நின்றிருந்த ஆணொருவர் சங்கிலியை அறுத்ததாகவும் அதனை தான் அவதானித்த போது, அந்நபர் அறுத்த சங்கிலியை தனக்கு பின்னால் இருந்த பெண் ஒருவரிடம் கொடுத்ததும் அந்த பெண் கூட்டித்திற்குள் கலந்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

குறித்த தமிழக பெண்ணுக்கு பின்னால் நின்று சங்கிலியை அறுத்தார் என குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் ஒன்றரை பவுண் சங்கிலியும் ஆராதனையின் போது களவாடப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் பின்னாலும் கைது செய்யப்பட்ட நபர் நின்றதை அந்த பெண் அவதானித்துள்ளார். இரு பெண்களினதும் சங்கலியையும் கைது செய்யப்பட்ட நபரே அறுத்தார் எனும் குற்றச்சாட்டில் சந்தேகநபராக நெடுந்தீவு பொலிஸாரினால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து, சந்தேக நபரை 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , தப்பி சென்றதாக கூறப்படும் பெண் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அப்பெண்ணை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *