பஹ்ரைன் பர்முயுலா-1: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன்!

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றன.

இதன்படி, நடப்பு ஆண்டின் முதல் சுற்றான பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம், நேற்று பஹ்ரைன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.238 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 33 நிமிடங்கள் 56.736 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

11.987 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

38.637 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ஆஸ்டன் மார்டின் அணியின் வீரரான பெர்னாண்டோ அலோன்சோ, மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் இரண்டாவது சுற்றான சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 19ஆம் திகதி ஜெடா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *