அரசின் கைக்கூலியாகச் செயற்படும் டக்ளஸ்! – சபையில் போட்டுத் தாக்கிய சாணக்கியன் SamugamMedia

“இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க அரசு  முயற்சிக்கின்றது. அதன் ஒரு முயற்சியாக வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை – முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தும்  வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின் கைக்கூலியாகச் செயற்படுகின்றார்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

 “வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள். அரசின் தவறான தீர்மானங்களால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால், வடக்கு மாகாண விவசாயிகளிடமிருந்து 40 முதல் 60 ரூபாக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரின் முறையற்ற செயற்பாடுகளால் கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் மாடுகள் வெட்டியும், சுட்டும் கொல்லப்படுகின்றன. இவற்றைப் பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் மீன்பிடிக் கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை – முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின் கைகூலியாகச் செயற்படுகின்றார்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க அரசு முயற்சிக்கின்றது. அதற்குச் சார்பாகக் கடற்றொழில் அமைச்சர் செயற்படுகின்றார். இவ்வாறானவர்களை யாழ்ப்பாணம் மக்கள் இனிமேல் தேர்தலில் தெரிவு செய்யக்கூடாது” – என்றார்.

Leave a Reply