இன்று முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு! SamugamMedia

நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் இன்று (09) வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை விரிவுரைகளைப் புறக்கணிக்கவுள்ளனர் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்(FUTA) அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் வருமான வரி அறவீட்டு மற்றும் அரசாங்கத்தின் ஆரோக்கியமற்ற செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த முடிவுக்குத் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அவர் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசாங்கத்தின் வரி வசூலிப்பினால் எமது உறுப்பினர்கள் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த முறையற்ற வரி வசூலிப்புத் தொடர்பில் நாம் எமது சகோதர தொழிற்சங்கங்களுடன் இணைந்து பல்வேறு போராட்ட வடிவங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன், அரசாங்கத்துக்கு தீர்வு முன்மொழிவையும் வழங்கியிருந்தோம். துரதிஷ்டவசமாக அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. 

அதனால் வேறுவழியின்றி, அரசாங்கம் எமது கோரிக்கைக்குச் செவிசாய்க்கும் வரையில் – ஆகக் குறைந்தது இது தொடர்பில் பேசி முடிவெடுக்கும் வரை விரிவுரைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று எமது பிரதிநிதிகள் சபை முடிவெடுத்துள்ளது” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(09) வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ள அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டுக்குழு ஆகியன எதிர்வரும் 15 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

Leave a Reply