அரசியல் தீர்வைக் காண்பது ஜனாதிபதியின் கையில்! – தமிழரசின் தலைவர் மாவை தெரிவிப்பு! SamugamMedia

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையில்தான் உள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்பில்  முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் மற்றும்  சமகால நிலமைகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை இம்மாதம் 19 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளால் தமிழ்க் கட்சிகளுக்குள்  சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், இது நிரந்தர முடிவுகள் அல்ல.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக நாம் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும்.

ஏற்கனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துகொள்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி அதனை விரைவில் தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது எனப்  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய சூழலில்  13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்குப் பெளத்த பிக்குகளே எதிர்த்து வருகின்ற நிலை காணப்படுகின்றது.  

13 ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்துவது, இனப்பிரச்சினை  தீர்வு விடயங்களில்  பெளத்த தேரர்களும், தென்னிலங்கை கட்சிகளும் நடந்து கொள்ளும் முறைகள் தொடர்பில்  நாம் கவலை கொண்டுள்ளோம்.

இந்த விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய நிலமை எமக்குக் கவலை தருவதாக இருப்பதுடன் ஏமாற்றமாகவும் இருக்கின்றது.

இத்தகைய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதே  கட்டாய தேவையாகவும் உள்ளது. இதனை விரைவில் நாம் செயற்படுத்தி ஒன்றிணைவோம்” – என்றார்.

Leave a Reply