
கொழும்பு, பெப் 3: நாளை நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை வியாழக்கிழமை காலை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சஜித் பிரேமதாச கூறியது:
“ஒரு கலைஞராக, திரைப்படத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ரஞ்சன் ராமநாயக்க சேவையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினராக தனக்குக் கிடைத்த சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பொது சேவைக்காகவே அவர் வழங்கினார். நாளை நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அவர் சிறையில் இருந்து பூரண விடுதலை பெறுவார் என நம்புகிறேன்.
மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.