
புத்தளம் – உடப்பு, பெரியபாடு ஆழ் கடலில் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் இன்று பெரியபாடு பிரதேச ஆழ்கடலில் மிதந்து கொண்டிருந்த வேளையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் – பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பெரியபாடு ஆழ்கடலில் இயந்திரப் படகு மூலம் இருவர் கடலட்டை பிடிக்கச் சென்ற வேளையில் ஒருவர் ஆழ்கடலில் ஒட்சிஜன் உதவியுடன் இறங்கி கடலட்டையை பிடித்துக் கொண்டு மேலே வந்த போது குறித்த இயந்திர படகில் இருந்த மற்றைய மீனவர் காணாமல் போயுள்ளார். இயந்திர படகு மட்டுமே அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக உடப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன குறித்த மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து இவ்வாறு காணாமல் போன மீனவரை தேடியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன மீனவரின் சடலம் இன்று காலையில் ஆழ்கடல் பகுதியில் மிதிந்துள்ளதை அவதானித்த மீனவர்கள் சடலத்தை இயந்திர படகு மூலம் கரைக்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் திடீர் மரண விசாரனை அதிகாரியினால் மரண விசாரனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் மள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
