
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால், இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்கு நீதி கோரி , யாழ். மாவட்டத்தின் அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களும் இணைந்து, இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் , யாழ்.நகரிலுள்ள ஆளுநர் அலுவலகத்தையும், மாவட்டச் செயலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா அறிவித்துள்ளார்.
”நாளை காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், ஆளுநர் அலுவலகம் என்பவற்றுக்குள் எந்தவொரு பணியாளர்களையும் உட்செல்ல விடாது, பிரதான வாயில்களை முற்றுகையிட்டு எமக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். இந்தப் போராட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களையும் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.