
கற்பிட்டி – கலப்பில் இறால் தொழிலில் ஈடுபடும் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கற்பிட்டி முகத்துவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, கற்பிட்டி பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும் கறுப்புப் பட்டிகளை கையில் அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நங்கூரமிடப்பட்டிருந்த படகுகளிலும் கறுப்புக் கொடிகளை தொங்கவிடப்பட்டிருந்தனர்.
40 வருடங்களுக்கு மேலாக ஜீவனோபாயமாக செய்து வரும் இறால்பிடித் தொழிலை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான அனுமதியைத் தருமாறு கோரியும் கடந்த ஒருமாத காலமாக இறால்பிடித் தொழிலை நிறுத்தியமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறும் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையிலேயே அதிகளவிலான இறால் உற்பத்தி புத்தளம் மாவட்டத்திலேயே காணப்படுவதாகவும் குறித்த இறால் ஏற்றுமதியினால் இலங்கைக்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டிக் கொடுத்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

