
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் 5 வருடங்களுக்கு முன்னர் , கர்ப்பிணிப் பெண்ணொருவரை பட்டப்பகலில் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை, கரம்பொன் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மேரி ரம்சியா ( வயது -27) என்ற கர்ப்பிணிப்பெண்ணை, 2017 ஆம் ஆண்டு, ஜனவரி 24 ஆம் திகதி இனந்தெரியாத சிலர் கோடரியால் தலையில் தாக்கி, படுகொலை செய்ததோடு, வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் இப் படுகொலை சம்பந்தமான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்தனர். இதன்போது கொலையுண்ட கர்ப்பிணிப் பெண்ணின் கணவரின் தொலைபேசிக்கு, சம்பவ தினத்தன்று வந்த சில அநாமதேய அழைப்புகளும் ஆராயப்பட்டன.
அன்றையதினம் பணியில் இருந்த அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அவர் வீட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கொலையாளிகள் கர்ப்பிணியைக் கொலை செய்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. இதனையடுத்து, குறித்த தொலைபேசி இலக்கத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தொடர் புலனாய்வின் அடிப்படையில் கர்ப்பிணியின் கொலையோடு தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நெடுந்தீவில் வைத்து , கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, இந்தக் கொலைவழக்கின் இன்னொரு சந்தேகநபர் , பிறிதொரு வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அவரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை ஊர்காவற்துறை நீதவான் நேற்று வழங்கினார்.