மாகாண கல்வி அதிகாரங்களை மீட்கும் சட்ட போராட்டம் தொடரும்; அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை – சர்வேஸ்வரன் தெரிவிப்பு SamugamMedia

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும்  எண்ணத்தில் இருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களை சட்ட விரோதமான முறையில் மத்திய அரசாங்கம் பறித்ததுக்கு எதிராக நான் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடுத்தேன்.

இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட 13 வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் பறித்துள்ளது.

கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகள் சார்ந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண நியதி சட்டங்களையும் மீறும் வகையில்  பல விடயங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக மாகாண கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய பாடசாலைகள் ஆயுதப் படைகளின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக வரையறுக்கப்பட்டது.

வடக்கு கல்வி அமைச்சில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக இருந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் கீழே இருந்த மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டது.

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும்  திட்டத்தின் கீழ் வடக்கில் 51 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது.

மாகாண பாடசாலைகளை பறிக்கும் முயற்சிக்கு எதிராக  தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும்  உரிய அக்கறை காட்டாத நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தேன்.

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட  வழக்கில் அரச தரப்பு சார்ந்து 16 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டது.

வழங்கானது கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சகலருக்கும் நீதிமன்றம் ஆணை அனுப்பியது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக்கும் வேலை திட்டத்தினை சற்று பின்வாங்கிய நிலையில் இருப்பதாக தெரியவர நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்புக் கொள்ளும் வரை  சட்டப் போராட்டம் தொடரும்.

ஆகவே வழக்கின் முடிவுகள் எதுவாக இருந்தாலும்  மாகாண அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பறித்தல்,தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்தல், சில நிர்வாக நடைமுறைகள் ஊடாக பறித்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தகுந்த பதிலை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply