
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும், ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள 74ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3,000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இன்றைய தினம் வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அந்த வீதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
74 வது சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு இவ்வருடம் கடற்படையினரின் 25 சல்யூட் ஷாட்கள் மற்றும் விமானப்படையினரால் விமானக் கண்காட்சி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, விழா நடைபெறும் நாடு சார்பில் காலி முகத்திடலில் இருந்து இலங்கை கஜபாகு கப்பலில் இருந்து 25 சல்யூட் ஷாட்கள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளுடன் காலாட்படை இணைந்து 26 விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு வான்வெளியில் காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.