தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பொழுது மருத்துவமனைகளில் உயிராபத்தினை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதுடன் வேறு சிகிச்சைகள் வழங்கப்பட மாட்டாது என அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் தலைவர் எஸ்.மதிவாணண் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று நடாத்தி அதில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று 5 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் 2 வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இன்றைய மாகாணங்களை விடுத்து ஏனைய மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது. . நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கைகள் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும். அனைவராலும் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் ஒரு கட்டமாக நாளையத்தினம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஏறக்குறைய 40 தொழிற்சங்கங்கள் இணையவுள்ளன.
ஆயினும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஆபத்தான நிலையில்இருப்போர், அவசர சிகிச்சை பிரிவில் இருப்போர் போன்றோருக்கு சிகிச்சை வழங்கப்படும். மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதற்காக மனம் வருந்துகின்றோம்.
இருப்பினும் பல்வேறு ஆலோசனைகளிற்கு பிறகே இதை முன்னெடுத்துள்ளோம். நியாயமற்ற வாரிக்கொள்ளை, சம்பள குறைப்பு அத்தோடு தொழில் வல்லுனர்களின் வாழ்க்கை தரம் வெகுவாக குறைந்து சாதாரண வாழ்க்கையினை கூட வாழமுடியாது போகலாம் என்ற அச்சத்திலும், அரச மருத்துவமனையில் காணப்படும்மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய கோரியுமே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகினரும் எனவரும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தாய் சங்கத்துடன் ஏனைய தொழிற்சங்க குழுக்கள் இணைந்து நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டே முடிவெடுக்கும். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.
இதனால் பொது மக்கள் உயிரிழக்காத வகையில் அவசர சிகிச்சை வழங்கப்படுவதோடு புற்று நோய் மருத்துவமனைகளான மஹரகம, அனைத்து இடங்களிலுமுள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் கொழும்பு கர்ப்பிணி மருத்துவமனை போன்றன இவ் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
தனியார் மருத்துவமனைகளிலும் எமது உறுப்பினர்களிற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அங்கும் அவசர சிகிச்சைகள் உயிராபத்தினை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும். ஆனால் வேறு சிகிச்சைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.