மன்னாரில் இருந்து வவுனியா கல்வாரிக்கு பாதயாத்திரை ஆரம்பம்!SamugamMedia

மன்னார் மறை மாவட்டத்தில் இருந்து வருடா வருடம்  ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும்  வவுனியா கோமரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இன்று (15)  புதன்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.

கத்தோலிக்கர்கள் வருடந்தோறும் அனுசரித்து வரும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் வவுனியாவில் உள்ள கோமரசன்குளம் கல்வாரி க்கு பாதயாத்திரை செல்வது வழமை. மன்னார் மறைமாவட்டம் இன்றி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் இன்று (15) புதன்கிழமை மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன்கிழமை(15) காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

குறித்த பாத யாத்திரையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ,மன்னார் தூய செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ்  வாழ்வுதயம் இயக்குனர் அருட்தந்தை அன்ரனி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் தங்கி   வெள்ளிக்கிழமை அதிகாலை வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை நோக்கி சென்றடைவார்கள்.

அங்கு  வெள்ளிக்கிழமை நடைபெறும் திருச்சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியில் கலந்து கொள்வார்கள்.

வவுனியா கோமரசன்குளம் கல்வாரி க்குச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ வசதிகள், குடிநீர் உணவு வசதிகள் போன்றவை ஏற்பாட்டுக் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply