செயற்திறன் குறைந்த நிலையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வந்து மூடுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும்.
அதனைப் பெற்றுக் கொள்ள பெரும் பிரயத்தனங்கள் செய்தோம். வரும் 20ஆம் திகதி ஒப்புதல் அளிக்கப்படும். முதல் தவணையாக மார்ச் மாதத்திலேயே கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் பெறப்படும்.
அரசாங்கம் இனி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்படும். அரசாங்கத்தின் தலையீட்டில் மீண்டும் எந்த ஒரு அரசாங்க தொழிலையும் தொடங்க மாட்டோம்.
தற்போது செயல்பாட்டில் மிகவும் கீழ்நிலையில் இருக்கும் அனைத்து அரச நிறுவனங்களும் மூடப்படும். சுமார் 40க்கும் மேற்பட்ட அவ்வாறான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றை மூடுவதற்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது இந்த நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.