நாட்டை சிறப்பாக மீட்டெடுக்க உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும் : றிசாத் பதியுதீன்! SamugamMedia

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி தேர்தலை இழுத்தடிக்க முனைவோர்கள் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களின் சேவைக்கால விடுகையும், நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுகமும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹீரின் தலைமையில் சனிக்கிழமை (18) இரவு நிந்தவூரில் இடம்பெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

இத்தேர்தலின் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கம் நாட்டு மக்களினதும் சர்வதேசத்தினதும் நல்லபிப்பிராயத்தை கொண்டதாக அமையும். அது நாட்டுக்கு பல்வேறு விதத்திலும் நன்மை பயக்கும். அரசியலமைப்பின் பால் கவனம் செலுத்தி ஜனநாயகத்தை வலியுறுத்தி உடனடியாக தேர்தலுக்கு சொல்லவேண்டியது கட்டாயம். 

69 லட்சம் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக, பிரதமராக, அமைச்சர்களாக இருந்து அரசாங்கம் அமைத்த ராஜபக்ஸவினர் மக்களினால் துரத்தப்பட்டதை அடுத்து மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ரணில் ஜனாதிபதியாகவும், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்டவர் பிரதமராகவும் இருந்துகொண்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட தடையாக இருக்கிறார்கள்.

 தேர்தலை நடத்துமாறு பாராளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் குரலுக்கு அவர்கள் பதிலில்லாமல் இருக்கிறார்கள். நீதிமன்ற அறிவிப்பு, சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள், தேசிய சிவில் அமைப்புக்களின் கோரிக்கைளை கூட இவர்கள் நிறைவேற்ற தயாரில்லை. ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள். 

நாட்டில் பொதுத்தேர்தலொன்றை நடத்தினால் ராஜபக்ஸ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் இயங்கும் இந்த அரசாங்கம் நிச்சயம் படுதோல்வியை சந்திக்கும். இந்த அரசாங்கம் நாட்டை குட்டிசுவராக்கி இன்றைய நிலைக்கு உட்படுத்திய ராஜபக்ஸ குடும்பத்தை காப்பாற்றுவதிலையே குறியாக இருக்கிறது.

 மக்களை பற்றி எந்த கவலையும் அவர்களிடம் இல்லை. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதா? இல்லையா என்ற இழுபறிக்கு செல்ல முன்னர் திடமான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். 

மக்களையும் ஏமாற்றி சர்வதேசத்தையும் ஏமாற்றி காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று நம்பினால் உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்றார். 

இந்நிகழ்வில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply