டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டிய காலத்தின் தேவையாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், திருகோணமலை மாவட்ட செயலகம், ஜேர்மன் ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் நியுக்ளியஸ் மன்றம் இணைந்து இன்று (23) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் ஏற்பாடு செய்த DigitAll எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக கண்காட்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாய்மை என்பது புனிதமானது. மகளிரின் அபிவிருத்திக்கு அரசாங்கம் அவசியமான உதவிகளினை வழங்கும். தம் முன்னே உள்ள சவால்களை முறியடித்து சாதனைப்பெண்களாக பெண்கள் செல்ல வாழ்த்துவதாக இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கபில அத்துகோரல தெரிவித்தார்.
டிஜிட்டல் வலயம், தொழில் வழிகாட்டல், தகவல் தொழிநுட்ப விடயங்கள், தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் 30 பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடநெறியை மேற்கொண்ட 24 இளைஞர் யுவதிகளுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி.எஸ்.ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, ஜேர்மன் ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள், நியுக்ளியஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் , திணைக்கள தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.