“உள்ளூராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும் எமக்குச் சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான ‘வறுமை நிவாரணங்கள்’ பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கின்றேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.” என எம்.பிக்கள், பன்னாட்டு தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஏற்பாட்டில் எதிரணி எம்.பிக்கள், இலங்கையிலிருந்து செயற்படும் அமெரிக்க, இந்தியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடிய போது மனோ எம்.பி. இந்தக் கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பில் மனோ எம்.பி. இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கின்றேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் இங்கே உரையாடப்பட்ட போது, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பியமையை நான் வரவேற்கின்றேன்.
அதேபோல் இந்தியப் பிரதித் தூதுவரும் தமது நாட்டின் நிரந்தர நிலைப்பாடாக மாகாண சபைத் தேர்தல் இருக்கின்றது எனக் கூறினார். அதையிட்டும் மகிழ்கின்றேன். உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் இரண்டும் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலும் முக்கியம் என்பது எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
அதேபோல் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான ‘வறுமை நிவாரணங்கள்’ பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயமாக வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இப்போது நலிவடைந்த பிரிவினரை அடையலாம் காணும் செயற்பாட்டை அரசு முன்னெடுகின்றது. அதில் நிறைய அரசியல் கலந்துள்ளது.
ஆகவே, அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, பெருந்தோட்ட உழைக்கும் மக்கள் உள்ளனர் என்பதை இன்று பல கணிப்பீடுகள் கூறுகின்றன. ஆகவே, உங்களது உதவிகளால் வழங்கப்படும் வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள், பெருந்தோட்டத்துறைக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.” – என்றுள்ளது.