உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
நீதிமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.
அத்துடன் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை எப்போது விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு இரண்டு மாத வேதனங்கள் கிடைக்கவில்லை. அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்தார்
அதற்கு பதில் வழங்கிய பிரதமர் தினேஸ் குணவர்த்தன,நீதிமன்றத்தில் இது தொடர்பில் பல வழக்குகள் இருப்பதாக கூறிய அவர், நீதியின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம், நீதிமன்றம் செல்லவில்லை என்றும் எதிர்க்கட்சியே நீதிமன்றம் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.