64வது ஆண்டில் வெற்றிகரமாக வீறு நடைபோடும் யாழ் தொழில்நுட்ப கல்லூரி!SamugamMedia

மூன்றாம் நிலையாக காணப்படும் தொழிநுட்ப கல்லூரியில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்யும் மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் நற்சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் எஸ்.பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரியானது 64 ஆம் ஆண்டில் காலடி பதித்துள்ளதால் 60 வது ஆண்டின் வைரவிழாவினை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2019ஆண்டளவில் நடத்த தீர்மானித்திருந்த வைரவிழா கொரோனா மற்றும் பொருளாதார  நிலைமைகளினால் பிற்போடப்பட்டுள்ளதுடன் தொழில்நுட்ப கல்லூரி தொடர்பான தகவல்களை உள்நாட்டிலுள்ளவர்களும், வெளிநாட்டிலுள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கு குறித்த விழாவினை ஊடகமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கு இடம்பெறும் பயிற்சி நெறிகளும் அவற்றுக்கான தகமைகளும், பயிற்சி நெறிகள் நிறைவடைந்த பின்னர் செல்ல வேண்டிய தொழில்கள் மற்றும் பயிற்சிகள் மற்றும் வருமானங்கள் என பலதரப்பட்ட விடயங்கள் யாழ் மாவட்டத்திலுள்ள பின் தங்கிய கிராமங்களிற்கு கூட சென்றடையவில்லை.

1959 ஆம் ஆண்டு அண்ணளவாக 100 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் கல்லூரி இன்று கிட்டத்தட்ட 1500 பிள்ளைகள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கற்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வடபகுதியில் காணப்படும் திணைக்களங்களில் வேலை செய்பவர்கள்  மற்றும் இங்கு கற்றலினை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் இங்கு கற்கைநெறியினை பூர்த்தி செய்தவர்கள். அத்துடன், 3 ஆம் நிலையாகவுள்ள தொழிநுட்ப கல்லூரிகளில் பயின்ற மாணவர்களும் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் நற்சான்றுகளை பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறாக மேற்கொள்ளப்படும் கற்கை நெறிகளை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதுடன் அவ்வாறு யாரும் உதவி செய்ய எண்ணினால் கல்லூரியின் காரியாலத்தினை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

O/L மற்றும் A/L பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் வீட்டில் பெற்றோர்களிற்கு சுமையாக இல்லாது சிறந்த முறையில் 3 ஆம் நிலை கல்வியூடாக மூன்று மாதம், ஆறு மாதம், ஒருவருடம் மற்றும் பகுதி நேரமென  பயிற்சிகளை பெற்று சிறந்த எதிர்காலத்தினை அமைத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *