தேசிய ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக்கோரி ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது,
தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஆசிரிய இடமாற்றங்களில் பல்வேறு குறைபாடுகள் மோசடிகள் நடைபெறுவது தொடர்பில் கடந்த காலங்களில் நாம் கல்வி அமைச்சிடம் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம். அவை எவற்றிற்குமே எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு மாறாக ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறுவதும், அதைக் கருப்பொருளாக வைத்து பலர் லஞ்சம் பெறுவதும் அதிகரித்துள்ளன.
சிலர் இதன்மூலம் லட்சக்கணக்கான பணத்தை ஆசிரியர்களிடம் பெற்றமை எம்மால் நிரூபிக்க முடியும். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் எந்தவொரு சபை உறுப்பினரும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருக்குமானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை முதலில் நாம் எடுப்போம்.
ஆனால் எமது சங்கத்தில் அதுபோன்ற லஞ்சம் பெறும் உறுப்பினர்கள் எவரும் இல்லை . என்பதனை உறுதியாக உரைக்க முடியும் . இதுபோன்ற லஞ்சம் பெறும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு இடமாற்ற சபையைக் கலைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களுமே . தயவு செய்து தாங்கள் எடுத்துள்ள முடிவை மாற்றி ஆசிரிய இடமாற்ற சபையானது சுயாதீனமாகவும் தூய்மையாகவும் நடைபெற ஆவண செய்யுங்கள் . கல்வியில் இடையூறுகள் ஏற்படுவது மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களின் மனங்களையும் புண்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.