புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.
இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளனர்.
சில்லறை வியாபாரத்திற்காக தினமும் 50 கிலோகிராம் காய்கறிகளை கொள்வனவு செய்து வந்த வியாபாரி தற்போது 10 கிலோகிராமையே கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
முன்னைய பண்டிகை மாதங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்திருந்த போதிலும், இந்த பொருளாதார சிரமங்களினால் கொள்வனவுகள் குறைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை குறையலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
அதன்படி கோதுமை மா விலை குறைக்கப்பட்டதையடுத்து பாணின் விலை குறைந்திருந்தது, அத்துடன் நேற்றைய தினம் சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.