மன்னார் மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 32 வயதுடைய ஏகாம்பரம் சுகிர்தன் (சின்னா) என்ற 32 வயது இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்சணாமருதமடு பகுதியிலேயே நேற்றையதினம் இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்சணாமருதமடுவை அண்மித்த காட்டுப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வதற்காக நான்கு இளைஞர்கள் தயாராகி நாட்டு துப்பாக்கியுடன் (இடியன்) ஊருக்குள் நண்பர் ஒருவரை அழைக்க சென்றிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் இவ்வாறு வேட்டைக்கு செல்ல தயாரான நான்கு பேரில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவ்வாறு இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் இடியனை கையில் வைத்திருந்த சின்னா என்ற உயிரிழந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொருவருக்கு இடியன் கைப்பிடியால் அடிக்க முற்பட்ட போது தவறுதலாக வெடித்ததில் இடியனை வைத்திருந்த சின்னா என்ற இளைஞன் காயமடைந்துள்ளார்.
தொடர்ந்து அருகில் நின்றவர்களால் பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து நோயாளர்காவு வண்டி ஊடக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.