ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தபால் பெட்டி சின்னத்தில் 9 சிவில் அமைப்புகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளதுடன், இலங்கை அரசியல் வரலாற்றில் சிவில் அமைப்புக்களுடன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்று கைகோர்த்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டணியில் சிவில் செயற்பாட்டாளரும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அசேல சம்பத், தமிழ் தேசிய பணிக்குழு தலைவர் நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்ட மகா சபைத் தலைவர் எஸ். ராஜேந்திரன், அகில இலங்கை சிறுகைத்தொழில் சங்கத்தின் ஸ்தாபகர் நிலூஷ குமார, தாழ்நிலை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் கால்லகே, தேசிய நுகர்வோர் சங்கத்தின் தலைவர் என்.பீ.கே. வணிகசிங்க, முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.எச். இஸ்மாயில், தோட்டத் தொழிலாளர் உரிமை மையத்தின் தலைவர் எஸ்.ஜே.சீ. விஜேதுங்க, இலங்கை சமத்துவ கூட்டணியின் பொதுச்செயலாளர் குவால்டின் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துகொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
9 சிவில் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (25) காலை கொழும்பு 7இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது எதிர்காலத்தில் மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுத்து, தமக்கே உரிய தனித்துவமான பாதையில் பயணிப்பதே எமது பிரதான நோக்கமாகும் என ஜனநாயக தேசிய கூட்டணித் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.