அரச ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் முன்னர் அறிவிக்கப்பட்டதற்கமைய வழங்கப்படவுள்ளதாகவும், இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிக்கு செல்லலாம் எனவும் பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும், அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு சம்பளம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் சட்டத்தின் பிரகாரம் கலைக்கப்பட்டன. எனவே அந்த சட்டத்தின்படி நடந்து கொள்கின்றோம். மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் சில விடயங்களை முன்வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையமும் உண்மைகளை முன்வைத்துள்ளது. அந்த முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் உள்ள விஷயங்களை நான் விவாதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நிதிப்பிரச்சினைகள் முழு நாடும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும், இருப்பினும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு பல சிறப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. நல்ல அறுவடை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை நினைத்து, செயற்படுவதாகவும், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.