வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் இனந்தெரியாத நபர்களால் குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இன்று(26) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் சென்ற போது சிலைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை குறித்த ஆலயத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயம் மேற்கொண்டதுடன், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.