வடக்கில் மட்டும் 167 இடங்களை குறிவைத்துள்ள தொல்பொருள் திணைக்களம்-வெளியான எச்சரிக்கை !samugammedia

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 167 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தி தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முகவர் அமைப்புக்களினால் புனித தலம் இடித்தழிக்கப்பட்ட மிகவும் மோசமான செயலை கண்டிப்பதோடு எதிர்காலத்திலே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் அல்லது அரசாங்கத்தின் முகவர் அமைப்புகளினால் செயற்படுகின்ற குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா ஏனைய மகாவலி எல் வலயம் இப்படியாக அரசாங்கத்தின் முகவர் அமைப்புகள் தமிழர் பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு தாயக பிரதேசங்களில் திட்டமிட்டு நில அபகரிப்பை இது போன்ற அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்வதனை கண்டிக்கின்றோம்.

தொல்பொருள் திணைக்களம் ஏறக்குறைய 330 பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் வடக்கு மாகாணத்தில் மட்டும் 167 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசாங்கம் சம்மந்தப்படவில்லை என கூற முடியாது. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தோடு, அனுசரனையோடு தான் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நாளை 30 ஆம் திகதி கண்டன பேரணிக்கு வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆதரவு வழங்க இருக்கின்றோம்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *