இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டில் உணவக உரிமையாளர் பலி! samugammedia

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்தது.

அஹங்கம – மிதிகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று மாலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அதன் உரிமையாளரே உயிரிழந்தார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிதிகம பிரதேசத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த சிந்து சந்தருவன் தொடம்கொடகே என்ற 31 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது. கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் ரி – 56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அதில் அவரது சகோதரர் கொல்லப்பட்டார்.

இதேவேளை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் உதவியாளர்களால் இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *