கல்முனையில் உணவு சீர்கேட்டுடன் உணவகங்கள்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!samugammedia

நோன்பு காலத்தில் மனித  பாவனைக்கு பொருத்தமற்ற   உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் புதன்கிழமை(29) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

கல்முனை நீதவான் நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட  மனித  பாவனைக்கு பொருத்தமற்ற   உணவுப்பொருட்கள் , அதனை உடைமையில் வைத்திருந்த உணவக உரிமையாளர்கள், அனைவரும்  மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் தலா 3 உணவகங்களுக்கும்   தண்டப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் போது சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தயாரிக்கும்  விற்பனை செய்யும்  வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும் முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மூன்று உணவகங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.
 
இதன் போது பழுதடைந்த சம்சா வைத்திருந்தமை , ஹோட்டல் கழிவு நீரை முறையாக அகற்றாமை , குளிரசாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காமை ,போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட உணவகங்கள் மீது ரூபா 15000,  ரூபா 10000  ,ரூபா 5000 , என்ற அடிப்படையில் தண்டப்பணம் செலுத்த கல்முனை நீதவான் நீதிமன்றம்   உத்தரவு  பிறப்பித்துள்ளது.

 உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய உணவுப்பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர்  சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம் ஜரீன்  தலைமையில்   பிரதேச உணவு தயாரிக்கும்  விற்பனை செய்யும்  வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள்  திடீர் பரிசோதனையும்  முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல் , சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன  பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதே வேளை கல்முனை  மாநகர சபையின்  ஆளுகைக்குட்பட்ட   மாட்டிறைச்சி கடைகளிலும்  நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு  உதவாத     இறைச்சி மற்றும் குடல்கள்  விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மனித பாவனைக்கு உதவாத மீன் வகைகள் அண்மைக்காலமாக  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 குறித்த மாவட்டத்தில்  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் கடலில் பிடிக்கப்படும்  அதிகளவான  மீன்கள்  வெளி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுவதனால் உள்ளுர் சந்தைகளில்  மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் எஞ்சிய மீன்களை அதிகளவான விலையில் விற்பனை செய்ய சந்தைகளில் உள்ள  விற்பனையாளர்கள்  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதே வேளை சந்தைகளில் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்ற மீன்வகைகளை பல நாட்களுக்கு களஞ்சியப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்காக  ஐஸ்கட்டி இட்டு ரெஜிபோம் பெட்டியில் 3 தொடக்கம் 4 நாட்களுக்கு மேலாக அடைத்து விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply