யாழ். பிரபல ஆண்கள் பாடசாலை மாணவனுக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணாகவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான விளக்கக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் விசாரணை இடம்பெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மாணவனுக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரியிருந்தது.
குறித்த விளக்கக் கடிதத்தில் குறித்த காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அது தொடர்பில் தாம் எடுத்த நடவடிக்கை தொடர்பிலும் பாடசாலை அதிபரால் விளக்கம் அளிக்கப்பட்டது.
விளக்கக் கடிதத்தில் மாணவனுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர் பகுதித் தலைவராகவும் ஒழுக்காற்று குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதுடன் கடந்த காலங்களில் தனது கடமைகளை நேர்த்தியாக செய்துள்ளார்.
நடைபெற்ற சம்பவத்தில் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணானவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் தண்டனை வழங்கிய மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பகுதித் தலைவர் உப அதிரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
எனினும் குறித்த விடயம் சட்ட மீறலாகவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தைத் தருகிறது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பகுதித் தலைவரை அழைத்து எந்தக் காரணத்துக்காகவும் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கக்கூடாது என தாபன விதிக் கோவையின் பிரமாணத்திற்கு அமைய எச்சரிக்கை செய்யப்பட்டது என பாடசாலை ஆதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
குறித்த விளக்கக் கடிதத்தின் பிரதி பணிப்பாளர் தேசிய பாடசாலைகள் பிரிவு ,கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.